Skip to content

சுயதொழில் தொடங்க உதவும் மாவட்டத் தொழில் மையங்கள்!

படித்த இளைஞர்கள் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி வேலை தேடிக்கொண்டிருப்பவராக இல்லாமல், சுயதொழில்  செய்பவர்களாகவும் வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும் மாறவேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான்  மாவட்டத் தொழில் மையங்கள். இந்த மையங்களின் உதவியால் சுயதொழில் தொடங்கி முன்னேறியவர்கள் தமிழகத்தில் ஏராளம். சிறு  மற்றும் குறு தொழிற்சாலைகள் தமிழகத்தில் ஏராளமாகப் பெருகியிருப்பதற்கு இந்த மாவட்டத் தொழில் மையங்களும் முக்கிய காரணம்.

படித்த இளைஞர்களுக்குச் சுயதொழில் தொடங்க மாவட்டத் தொழில் மையம் (District Industries Centre), உதவித்தொகையுடன்கூடிய தொழிற்பயிற்சிகளை  அளித்துவருவது குறிப்பிடத்தக்கது. பொது மேலாளர் தலைமையின்கீழ், இயங்கி வரும் மாவட்டத் தொழில் மையமானது, புதிய  தொழில்முனைவோருக்குத் தேவையான பயிற்சியை வழங்குவதோடு தொழில் சம்பந்தமான ஆலோசனைகளையும் அளிக்கிறது.

மாநிலத்தின் தொழில் வளர்ச்சித் தேவைக்கேற்ப செயலாற்றிவருவது இம்மையத்தின் சிறப்பம்சம். எனவேதான் தொழிற்சாலைகளை  நவீனப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்தின் தரத்தினை மேம்படுத்துவதற்குமான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகிறது.  வேலைவாய்ப்பினை அதிகப்படுத்துவதும் இம்மையத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று. இதன்மூலம், படித்த இளைஞர்கள்  திசைமாறிச் செல்லாமல் வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கு வழிவகை செய்யப்படுகிறது.

படித்த இளைஞர் ஒருவர் மாவட்டத் தொழில் மையத்தை அணுகினால் தொழில் தொடங்க ஆலோசனை,  திட்டஅறிக்கை  வழங்கப்படுவதோடு உரிய பயிற்சிக்கும் வழிவகை செய்யப்படுகிறது. அதேபோல கைவினைத் தொழில், குடிசைத்தொழில்  போன்றவற்றை ஊக்கப்படுத்துவதற்காக, இத்தொழிலை மேற்கொள்பவர்கள் தங்கள் தொழிலை நிறுவனமாகப் பதிவு செய்துகொள்ளும்  வசதியையும் மாவட்டத் தொழில் மையங்கள் ஏற்படுத்தித் தருகின்றன.

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), புதிய தொழில் முனைவோர் மற்றும்  தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் (NEEDS), பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) ஆகிய திட்டங்களின்கீழ்  சுயதொழில் தொடங்குவதற்கான வங்கிக்கடன் பெறுவதற்கு / மாவட்டத் தொழில் மையம் ஏற்பாடு செய்கிறது.

தமிழக அரசின் படித்த, வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின்கீழ் சுயதொழில்களைத் தொடங்க  வழங்கப்படும் வங்கிக் கடனில் 15 சதவீதம் மானியமும் வழங்கப்படுவது நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியச் செய்தி. மாவட்டத்  தொழில் மையம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. அந்தந்த மாவட்டத் தலைநகரத்தில் இம்மையம்  அமைந்திருக்கும். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்திருக்கும்.

மாவட்டத் தொழில் மையத்தின் முக்கியப் பணிகள்

1. பதிவு செய்தல் –  இதுதான் முதல் படி  
2.  இணையதளம் மூலம் பதிவு செய்தல்
3.  தொழில்முனைவோருக்கு குறிப்பாணை வழங்குதல்
4.  குடிசைத் தொழில் பதிவுச் சான்றிதழ் வழங்குதல்
5.  கைத்தொழில் பதிவுச் சான்றிதழ் வழங்குதல்.
6. ஒற்றைச்சாளர (Single Window) முறையில் தொழில்முனைவோருக்குச் சேவை அளித்தல்
7.  ஊக்கத் திட்டங்களைச் செயல் படுத்துதல்
8. உற்பத்தித் திறன் சான்றிதழ் அளித்தல்
9.  வங்கிகளில் கடன் பெறுவதற்குத் தொழில் ஆதார அறிக்கை அளித்தல்
10. ஏற்றுமதிக்கு வழிகாட்டுதல்
11. சிறு மற்றும் குறுதொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல்
12. தொழில் கூட்டுறவு சங்கங்களை ஒருங்கமைத்து பதிவு செய்தல்.
13. நாம் ஒரு துறையை அல்லது ஒரு உற்பத்திப் பொருளைத் தேர்ந்தெடுத்தால் போதும். அது சம்பந்தமான பயிற்சியை அவர்கள்  அளிக்கிறார்கள். இது ஒரு சேவையாகக் கூட இருக்கலாம். நிபுணர்களை அழைத்து பயிற்சி தருகிறார்கள்.
14. துறை சார்ந்த பயிற்சி மட்டுமில்லாமல் அதன் சந்தை நிலவரம் எப்படி இருக்கிறது, எந்த அளவிற்கு லாபம் தரும் என்ற அடிப்படை  விவரங்களையும் தருகிறார்கள்.
15. ஒரு தொழிலுக்குண்டான இயந்திரங்கள் எங்கெங்கு கிடைக்கும், எப்படி வாங்கலாம் என்பதையும் விளக்குகிறார்கள். நவீன அல்லது  இப்போது சந்தையில் இருக்கும் புதியரக இயந்திரங்களின் விவரங்களை நாம் அறியலாம்.
16. வங்கிக் கடனுக்குத் தேவையான திட்ட அறிக்கையைத் தயாரித்துத் தருவதோடு மட்டுமில்லாமல் அதன் கூறுகளை, நுட்பங்களை  நமக்கு விளக்குகிறார்கள். வங்கி மேலாளர் அது சம்பந்தமான சந்தேகங்கள் அல்லது கேள்வி கேட்கும்போது நம்மால் பதில் சொல்ல  முடியும். கடன் பெறுவதில் இது மிகவும் முக்கியமானது.
17. கணக்கு வழக்குகளை எப்படிப் பராமரிப்பது, அதை எளிமையாக எப்படிப் புரிந்துகொள்வது. அப்படிப் புரிந்துகொள்ள வேண்டியதன்  அவசியம் என்ன என்பதும் இங்கே கிடைக்கும் இன்னொரு பாடம்.
18.பயிற்சி முடிந்த பிறகும் நமக்கு ஏற்படும் சந்தேகங்களையும் சந்திக்கும் பிரச்னைக்களுக்கு உண்டான தீர்வுகளையும் அளிக்கிறார்கள்.  புதிய தொழிலுக்
கானது மட்டுமில்லாமல் அதன் விரிவாக்கத்திற்கும் உதவுகிறார்கள்.
19. பயிற்சியின்போது நாம் சந்திக்கும் நிபுணர்களின் தொடர் ஆலோசனை இந்த மையங்களின் மூலமாகச் சாத்தியப் படுகிறது.
20. இந்தப் பயிற்சிக்குப் பின் நாம் பெறுகின்ற சான்றிதழ் வங்கி மற்றும் நாம் அணுகும் அரசுத் துறை அலுவலகங்களில் கூடுதல்  பலத்தை நமக்கு அளிக்கிறது.
21. ஓரிரு வாரப் பயிற்சி முதல் ஒரு மாத பயிற்சிகள் வரை இங்கே இருக்கின்றன. இந்தத் துறையின் வலைத்தளத்தில் வரவிருக்கும்  பயிற்சி முகாம்களின்
விவரங்கள் முன்னதாகவே தெரிவிக்கப்படுகின்றன.  
23. அடிப்படைப் பதிவுகளுக்குப் பெரும்பாலும் கட்டணங்கள் ஏதும் இருக்காது. அப்படியே இருந்தாலும் அது பெரிய தொகையாகவும்  இருக்காது.
24. ஜி.எஸ்.டி. போன்ற வரி விஷயங்களில் நமக்குப் பயம் இருக்கிறது. அடிப்படை விவரங்கள் தெரியாத காரணத்தால், இது  சம்பந்தமாகவும் தொழில் மையங்கள் நமக்கு விளக்குகின்றன. 25. வருமானத்திற்கு வழியின்றி வழி சொல்வார் யாருமின்றி இருக்கும்  படித்த இளைஞர்களுக்குத் தக்கதொரு வெகுமானம்தான் இந்த மையங்கள்.

இந்தியாவிலேயே தொழில் வருவாயில் முன்னணியில் இருக்கும் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தொழில் வளர்ச்சிக்கு  இன்னும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. முயற்சியும் உடல் உழைப்பையும் மூலதனமாக்குபவர்கள் தொழில்முனைவோர் ஆகலாம்.  வாழ்வில் உயர்வடைய நீங்களும் முயன்று பார்க்கலாம்!

2 thoughts on “சுயதொழில் தொடங்க உதவும் மாவட்டத் தொழில் மையங்கள்!”

    1. ஜிஎஸ்டி, உத்யம்(MSME), பான் கார்டு, ஆதார் கார்டு, FSSAI, IE Code தொடர்புடைய சேவைகளை எளிதாக வாட்ஸ்அப்பில் பெறலாம்.

      Hi என்று 📲 96003 48046-வுக்கு வாட்சாப் அனுப்புங்கள்…

      விவான விவரங்களை பெறுங்கள்!

      kavini.net
      விரைவான சேவை!
      எளிதான செயல்முறை!!

Leave a Reply

Contact to us