.
முத்ரா கடன் தொகைக்கு பிணையாக எந்த ஒரு சொத்து சம்பந்தப்பட்ட சான்றிதழ்களும் சமர்ப்பிக்கப்பட தேவையில்லை
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கான சரியான திட்டமும் கையில் இருக்கிறது ஆனால் பணம் தான் இல்லை என கவலைப்படுகிறீர்களா? இனி கவலை வேண்டாம் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த முத்ரா திட்டத்தி கீழ் எப்படி 10 லட்சம் வரை கடன் பெறலாம் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனாஎன அழைக்கப்படும் இந்த திட்டத்தில் நீங்கள் கடன் பெற வேண்டும் என்றால் முதலில் உங்களிடம் இருக்க வேண்டிய ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம். வீட்டின் உரிமை அல்லது வாடகை ஆவணங்கள், வேலை தொடர்பான தகவல்கள், ஆதார் அட்டை, பான் எண். இந்த ஆவணங்கள் மட்டுமே போதுமானது.
இதை தான் வங்கியில் அடையாள ஆவணங்களாக சமர்பிக்க வேண்டும். அருகிலுள்ள வங்கிக் கிளையைத் தொடர்பு கொண்டு, அவர்களிடம் இதுக் குறித்த விவரங்களை கேட்டறிந்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை வங்கியிடம் வழங்கி கடனுக்கு விண்ணப்பிக்கலாம். வங்கி தரப்பில் ஃபார்ம் ஒன்று வழங்கப்படும். அதை நீங்கள் நிரப்ப வேண்டும்
முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வாங்குபவர்கள் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். சிஷோ, கிஷோர் பிரிவு, தருண் பிரிவு. இவர்கள் முறையே ரூ.50,000, ரூ. 50,000 முதல் ரூ. 5 லட்சம் , ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் பெற முடியும். அதற்கான அளவுகோலை வங்கி தரப்பு முடிவு செய்யும். இந்த கடன் தொகைக்கு பிணையாக எந்த ஒரு சொத்து சம்பந்தப்பட்ட சான்றிதழ்களும் சமர்ப்பிக்கப்பட தேவையில்லை. முத்ரா யோஜனா திட்டத்தில் நிலையான வட்டி விகிதம் இல்லை. வெவ்வேறு வங்கிகள் முத்ரா கடன்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை விதிக்கலாம்.
நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க நினைத்தாலும் அல்லது சிறு குறு தொழில் செய்ய விரும்பினாலும் ஈஸியாக மத்திய அரசு தரும் இந்த முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் வரை எளிமையாக கடன் பெற்று விரும்பிய தொழிலை செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் பல தொழில் முனைவோர்கள் உருவாகி வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.